மூக்கு உடைந்தும்,
வாயின் வலப்பக்கத்தில் இரத்தம் கசிந்தபடிக்கும்,
உன் பெயரை முனுமுனுத்தபடியே
மூர்ச்சையான என்காதலை
முதுகில் தூக்கி போட்டுக்கொண்டு.....
கோவில் பின்புறத்திலும்;குளக்கரையிலும்;
பெரும்பாலும் கனவிலும்..
நீ மொழிந்து தீர்த்த காதலை,
உப்பி கிழியும் வரை சட்டைப்பையில் திணித்துக்கொண்டு....
மூலையில் பல மடிந்து மௌனித்திருக்க.,
சிலது நா தள்ளியும்,கிழிந்தும் காற்றில் புலம்பியிருக்க.,
காலை கட்டிக்கொண்டு அழும்-உன் ஒருசில
கடிதங்களை மட்டும் தரதரவென இழுத்துக்கொண்டு.....
முரட்டு நிகழ்வுகளை எதிர்நோக்கி
முனைந்த இரண்டொரு நிமிடங்களில் தெரிகிறது...
தெருவோரத்தில்...
நியாபகம் தப்பிய நிலையில்.,
ஈக்கள் மொய்த்தபடிக்கு.,
கசங்கிய என் கடிதங்களினூடே
பிரேதமென உன் காதல்.!!
முதுகில் இருந்து மெல்ல இறக்கினேன்.
நினைவிழந்திருந்தது என் காதலுக்கு!!
செத்துவிட்டிருக்குமோ....?
சோதிக்க திராணியில்லை!!
சரிந்த தலைநிமிர்த்தி..
உன் திசைபார்த்தபடி கிடத்தி...
விழிப்பின் இருக்கட்டுமென-உன்
முத்தங்கள் சிலதை சட்டையில் சொருகியபின்.,
விசை குறைந்த பெருமூச்சை
வெளியேற்றியபடி முனகுகிறேன்.,
"காதல்களை சேர்த்தாகிவிட்டது..!!"
விழுந்திருக்குமோ செவியில்...???
புரண்டு படுக்கிறது.,
உன்காதல் மேல் கைபோட்டபடிக்கு
என்காதல்!!!
No comments:
Post a Comment