தீ உருண்டையாம் பூமியின் அம்மணக்கோலம்
நீராய்,மரம்செடியாய்
மலையாய்,மண்துகளாய்
மெல்ல மூடப்பட்டுக்கொண்டிருந்த சமயம்-
நிர்வாணத்தையே உடுத்திக்கொண்டு
ஈடன் தோட்டத்தில் உலவினான் ஆதாம்!
ஏவாளும் அப்படியே!!
பின்னொரு நாளில்,
சர்ப்பமாம்,சாத்தானாம்,
காதலிக்க கனிகள் தருபவனாம்,
தந்துவிட்டுப்போன ஆப்பிளை கடித்தவுடன்
நிர்வாணத்தின் வாய் மூடப்பட்டுவிட்டது!!
'உடல்' மறைப்பதாய் உயிர்த்த
மரப்பட்டையும்,மான்தோலும்,
தன் பிறவிப்பயன் பின்தள்ளி,
'அங்கம்' மறைக்க ஆயுத்தமானது!!
பல நுற்றாண்டுகள் சாவதானமாய் சுற்றிக்கொண்டிருந்த
உருண்டையின் சிறு உன்னதபுள்ளியில் ஜீவித்த
போதிமரத்தின்கிளையில்-ஒரு சாயுங்காலத்தில்,
சித்தார்த்தன் கிழித்தெரிந்த மேல்சட்டை சிக்கிக்கொண்டு-
நிர்வாணத்தின் நியாயத்தை
வேர்வரை செப்பிக்கொண்டிருந்தது!!
நிர்வாணம் சூன்யம்,
நிர்வாணம் முடிவிலி,
நிர்வாணம் நிஜம்-இருப்பினும்
போதிமரக்கிளையும் சரி...
புத்தனின் நிர்வாணமும் சரி...
சில நுற்றாண்டுகள்கூட நீடித்திருக்கவில்லை!!
இன்னிமிடம் வரை நம்மினம்தவிர எவ்வினமும்
நிர்வாணத்தை அவிழ்த்துவிடவில்லை.
பின் நாகரிகத்தின் முகம்பார்க்க தொடங்கி
முதுகுவரை கண்டுதெளிந்திட்ட நம்மினம்-
நிர்வாணத்தை நான்குசுவற்றிற்குள் நியாயப்படுத்திக்கொண்டது.
ஆடை அவிழ்ப்பது நிர்வாணமாகிவிடா-
ஆடை துறப்பது நிர்வாணம்!!
அவிழ்க்கப்பட்டுப்பட்டு பின் துறப்பதற்கு துணிந்திட்ட
அத்தாசியாம்-அவள் மூளையில்,
நியூரானோடு,நிர்வாணத்தின் வேர்களும் பின்னப்பட்டிருக்கும்!!
அகசுவாதீனம் அற்றுப்போய்-அழுவதையும்,சிரிப்பதையும்
ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தவல்ல அச்சகோதரியாம்,
அவளை அறியாமல் சரிந்துவிழும் மாராப்பில்-
நிர்வாணத்தின் ஒரு சிறுநம்பிக்கை நிமிர்ந்துநிற்கும்!!
எத்தகை வாழ்க்கை வாழ்ந்திட்டோம்??
காதலித்த பொழுதுகளின் புதர்மறைவிலும்-
இரவு நேரக்காட்ச்சியின் இடைவேளையிலும்-
காமத்துப்பால் சொம்பின் பக்கத்தில் ஒரு கிண்ணத்திலும்-
நிர்வாணத்தின் நீளஅகலம் அளக்கிறோம் நாம்!!
ஊதா பூக்களும்,ஆப்பிளும்
நிறைந்த அந்த ஈடன் தோட்டத்தில்,
ஆதாமின் கையிலிருந்த ஆப்பிளின் மிச்சம்தின்று
புறப்பட்ட அந்த நிர்வாணப்பறவை-
அதே புத்தன் பிறந்த ஒரு சாயுங்காலத்தில்,
மின்கம்பியில் அமர்ந்தவண்ணம்'
நம் தலையில் எத்தித்தள்ளும் எச்சத்தில்
நிர்வாணத்தின் விதை நிச்சயம் இருக்கும்!
அதன் வேர் மூளை இறங்கி,மனம் துளைத்து,
வெளியேறி நம் சட்டைகிழிக்கும்போது
நிர்வாணத்தின் வாய் தானாக திறந்துகொள்ளும்!!
No comments:
Post a Comment