Monday, December 28, 2009

குரங்காகி, காமமாகி, பின் காதலாகி!!

பரிணாமத்தின் பொத்தான்கள்
அவிழ்ந்த வேகத்தில் -
வால் விழுந்ததுவும்,
கூன் நிமிர்ந்ததுவும்,
மேனி மயிர் உதிர்ந்ததுவும் நினைவிழந்து -
மரமேற்றதின் உச்சியில்,
தன் குறி மறைக்க உந்தியதும் கை எடுக்க.,
விழுந்த குரங்கின் கீழ்புறமிருந்து
சில மனிதனும் , நிறைய காதலும் வடிந்திருக்கும்.!!

ஆதி மனிதனின் முதல் புணர்தலில் ,
வெட்கம் விரிந்த மேனிக்கு கீழிருக்க,
கனத்து வீங்கிய காமத்தின் உரசலில்
வெள்ளையாய் காதல் வெளிபட்டிருக்கும்.!!

கூச்சத்தையும் ,சிணுங்கலையும்
முத்தத்தையும், முனகலையும்
மொழியாக்கிய அவசரத்தில்
காமதிருப்பத்தை காதலிப்பதாய்
கிறுக்கிய சுவடுகள்,
மொஹெஞ்சதாரோ குடுவையிலோ,
ஆப்பிரிக்கா மர பொந்திலோ,
அஜந்தா குகை சுவரிலோ,
பத்திரமாய் இருந்திருக்கும்!!

காலத்தின் அக்குள்களில்
மறைந்த முடியாகிய -அச்சிறு
மொழிவிளக்கம் யாதெனில்...
"யோனி சிவத்தலும் ,
குறி விரைத்தலுமே காதல்!!"

Wednesday, November 11, 2009

உபயோகிப்பதில்லை உன் நினைவுகளை.!!

தேநீர் அருந்துகையில்,
இரண்டு பருகைக்கு
இடையில் சிக்கிக்கொள்ளும்
சர்க்கரை நிமிடங்களில்..

மதிய இடைவேளையில்,
உணவு மறுதலித்து,
தட்டில் சுற்றும்
மேல் மின்விசிறியின் பிம்பத்தோடு
சுற்றிய தருணங்களில்..

தூக்கம் தொலைந்து,
கெட்டித்து போயிருக்கும்
பின் இரவுகளில்...

வீங்கி கனத்திருக்கும்
விடிகாலை மௌனங்களில்..

உபயோகிப்பதில்லை
உன் நினைவுகளை.
இருக்கட்டும் என
பத்திரப்படுத்திவிட்டேன்
என் கவிதைகளில்....

நான் விந்தாகவே வாழ்ந்துவிட்டிருப்பேன்!!


இந்த தலைமுறை-
இதயங்களை கெட்டியாகவே வார்த்துவிட்டது.
வாழ்ந்து பழக நேரமில்லை இவர்களுக்கு!

காலிடறி விழுந்த காரியத்திற்குள்ளும்-எழுந்து அமர்ந்து,
விழுதல் புரிந்து, அங்குலம் அங்குலமாக அளவி ஒய்ந்து,
மேடேறி மேல்வந்து-
ஒரு குடுவையில் வியர்வையையும்,
ஒரு குடுவையில் விளங்கியவையையும்-வழித்தெடுத்து,
காலக்குப்பியில் இட்டு,
திட்டுதிட்டாய் வழ்க்கைவரைய தெரியவில்லை!

புது யுகத்திற்க்கு போகும் அவசரத்தில்
கடந்த காலத்தின் கால்செருப்புகளை தொலைத்தவர்கள்!

தாயின் மரணத்திற்கும் அழதேவையில்லையாம்!
அழுதல் பலவீணமாம்!!
தேவைக்கேற்ப முகமூடிகள் தயரித்துக்கொண்டவர்கள்!

மொட்டுகள் விரியும் வரை பொறுக்கவேண்டாமாம்!
மருந்துகள் கொண்டு
பூவையும் விரைந்து பூப்படையச்செய்தவர்கள்!!

குண்டு தயாரிப்பதை குடிசைதொழிலாக்கியவர்கள்!

மெக்காலேயின் நீட்சியாக
முலை சுருங்கி
புத்தகம் சுமக்க ஏதுவாக
முதுகில் மூட்டையோடு பரிணமித்துவிட்டவர்கள்!

ஒரு இமாலய நம்பிக்கையொடு
புத்தக நடுவில் பத்திரப்படுத்திய மயிலிறகுகள்-
குட்டி போடுவதில்லை இப்பொழுது!
அதற்கும் "அபார்சன்" பழக்கியவர்கள்!

பாட்டி கதை,
நிலா சோறு,
அம்மா மடி,
தொட்டில் தூக்கம்...
அனைத்தையும் துடைத்தெடுத்து
சிலவற்றை பரண்மேலும்,
சிலவற்றை முதியொர் இல்லத்திலும்,
சரிவர அடக்கம் செய்தவர்கள்!

அம்மா
பாலூட்ட,பாசம் காட்ட
கணினி கண்டுபிடித்துவிடுவார்கள்!
மன்னித்துவிடு என்னை..
நான் விந்தாகவே வாழ்ந்துவிட்டிருப்பேன்!!
-----------------------------------------------------------

இது ஒரு மிகச்சிறிய கூட்டத்தை நோக்கி வீசப்பட்ட வரிகள்.
அந்த சிறிய கூட்டத்தில் நீங்களோ நானோ நின்றுகொண்டிருப்போமானால்
இது தடம்பதியாத ஒரு மெல்லிய சவுக்கடி!
இருவருக்கும்.

காதலும் சாகும்

நீளஅகல முடிவிலா
நெடிய பள்ளத்தாக்கின்
உயரிய முனை மழுங்கிய பாறையுடன்
பற்றற்று விலகி.,
கீழ்நோக்கிய ஒரு நீண்ட பயணத்தில்
கனத்து லேசாகி..,
லேசாகி பின் கனத்து,..

ஒரு பனிவிரவிய பாறையில் பட்டு
சிதறுண்ட கபாலச் சில்லுகளில் படிந்திட்ட
சதைப்பிசுக்கை கொத்தியபடிக்கு
கத்தும் கழுகின் ஓலத்தில்
சிக்கித் தொலைகிறது என்
மங்கிய முனகலின் ஈரம்!

காதல் வீரியத்தின்
விசைமுறுக்கிய சிறுஅகமுனைதலில்
தொடங்கிய அந்த நீண்ட பயணத்தை.,
கோழை என மொழிபெயர்ப்பின்,
காதலும் சாகும்!

Friday, August 7, 2009

நிர்வாணத்தின் வேர் தேடி....


தீ உருண்டையாம் பூமியின் அம்மணக்கோலம்
நீராய்,மரம்செடியாய்
மலையாய்,மண்துகளாய்
மெல்ல மூடப்பட்டுக்கொண்டிருந்த சமயம்-
நிர்வாணத்தையே உடுத்திக்கொண்டு
ஈடன் தோட்டத்தில் உலவினான் ஆதாம்!
ஏவாளும் அப்படியே!!
பின்னொரு நாளில்,
சர்ப்பமாம்,சாத்தானாம்,
காதலிக்க கனிகள் தருபவனாம்,
தந்துவிட்டுப்போன ஆப்பிளை கடித்தவுடன்
நிர்வாணத்தின் வாய் மூடப்பட்டுவிட்டது!!

'உடல்' மறைப்பதாய் உயிர்த்த
மரப்பட்டையும்,மான்தோலும்,
தன் பிறவிப்பயன் பின்தள்ளி,
'அங்கம்' மறைக்க ஆயுத்தமானது!!

பல நுற்றாண்டுகள் சாவதானமாய் சுற்றிக்கொண்டிருந்த
உருண்டையின் சிறு உன்னதபுள்ளியில் ஜீவித்த
போதிமரத்தின்கிளையில்-ஒரு சாயுங்காலத்தில்,
சித்தார்த்தன் கிழித்தெரிந்த மேல்சட்டை சிக்கிக்கொண்டு-
நிர்வாணத்தின் நியாயத்தை
வேர்வரை செப்பிக்கொண்டிருந்தது!!

நிர்வாணம் சூன்யம்,
நிர்வாணம் முடிவிலி,
நிர்வாணம் நிஜம்-இருப்பினும்
போதிமரக்கிளையும் சரி...
புத்தனின் நிர்வாணமும் சரி...
சில நுற்றாண்டுகள்கூட நீடித்திருக்கவில்லை!!

இன்னிமிடம் வரை நம்மினம்தவிர எவ்வினமும்
நிர்வாணத்தை அவிழ்த்துவிடவில்லை.
பின் நாகரிகத்தின் முகம்பார்க்க தொடங்கி
முதுகுவரை கண்டுதெளிந்திட்ட நம்மினம்-
நிர்வாணத்தை நான்குசுவற்றிற்குள் நியாயப்படுத்திக்கொண்டது.

ஆடை அவிழ்ப்பது நிர்வாணமாகிவிடா-
ஆடை துறப்பது நிர்வாணம்!!
அவிழ்க்கப்பட்டுப்பட்டு பின் துறப்பதற்கு துணிந்திட்ட
அத்தாசியாம்-அவள் மூளையில்,
நியூரானோடு,நிர்வாணத்தின் வேர்களும் பின்னப்பட்டிருக்கும்!!

அகசுவாதீனம் அற்றுப்போய்-அழுவதையும்,சிரிப்பதையும்
ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தவல்ல அச்சகோதரியாம்,
அவளை அறியாமல் சரிந்துவிழும் மாராப்பில்-
நிர்வாணத்தின் ஒரு சிறுநம்பிக்கை நிமிர்ந்துநிற்கும்!!

எத்தகை வாழ்க்கை வாழ்ந்திட்டோம்??
காதலித்த பொழுதுகளின் புதர்மறைவிலும்-
இரவு நேரக்காட்ச்சியின் இடைவேளையிலும்-
காமத்துப்பால் சொம்பின் பக்கத்தில் ஒரு கிண்ணத்திலும்-
நிர்வாணத்தின் நீளஅகலம் அளக்கிறோம் நாம்!!

ஊதா பூக்களும்,ஆப்பிளும்
நிறைந்த அந்த ஈடன் தோட்டத்தில்,
ஆதாமின் கையிலிருந்த ஆப்பிளின் மிச்சம்தின்று
புறப்பட்ட அந்த நிர்வாணப்பறவை-
அதே புத்தன் பிறந்த ஒரு சாயுங்காலத்தில்,
மின்கம்பியில் அமர்ந்தவண்ணம்'
நம் தலையில் எத்தித்தள்ளும் எச்சத்தில்
நிர்வாணத்தின் விதை நிச்சயம் இருக்கும்!
அதன் வேர் மூளை இறங்கி,மனம் துளைத்து,
வெளியேறி நம் சட்டைகிழிக்கும்போது
நிர்வாணத்தின் வாய் தானாக திறந்துகொள்ளும்!!

Tuesday, August 4, 2009

நியாபகம் தப்பிய உன்காதலும்,மூர்ச்சையான என்காதலும்....


மூக்கு உடைந்தும்,
வாயின் வலப்பக்கத்தில் இரத்தம் கசிந்தபடிக்கும்,
உன் பெயரை முனுமுனுத்தபடியே
மூர்ச்சையான என்காதலை
முதுகில் தூக்கி போட்டுக்கொண்டு.....

கோவில் பின்புறத்திலும்;குளக்கரையிலும்;
பெரும்பாலும் கனவிலும்..
நீ மொழிந்து தீர்த்த காதலை,
உப்பி கிழியும் வரை சட்டைப்பையில் திணித்துக்கொண்டு....

மூலையில் பல மடிந்து மௌனித்திருக்க.,
சிலது நா தள்ளியும்,கிழிந்தும் காற்றில் புலம்பியிருக்க.,
காலை கட்டிக்கொண்டு அழும்-உன் ஒருசில
கடிதங்களை மட்டும் தரதரவென இழுத்துக்கொண்டு.....

முரட்டு நிகழ்வுகளை எதிர்நோக்கி
முனைந்த இரண்டொரு நிமிடங்களில் தெரிகிறது...
தெருவோரத்தில்...
நியாபகம் தப்பிய நிலையில்.,
ஈக்கள் மொய்த்தபடிக்கு.,
கசங்கிய என் கடிதங்களினூடே
பிரேதமென உன் காதல்.!!

முதுகில் இருந்து மெல்ல இறக்கினேன்.
நினைவிழந்திருந்தது என் காதலுக்கு!!
செத்துவிட்டிருக்குமோ....?
சோதிக்க திராணியில்லை!!

சரிந்த தலைநிமிர்த்தி..
உன் திசைபார்த்தபடி கிடத்தி...
விழிப்பின் இருக்கட்டுமென-உன்
முத்தங்கள் சிலதை சட்டையில் சொருகியபின்.,

விசை குறைந்த பெருமூச்சை
வெளியேற்றியபடி முனகுகிறேன்.,
"காதல்களை சேர்த்தாகிவிட்டது..!!"

விழுந்திருக்குமோ செவியில்...???
புரண்டு படுக்கிறது.,
உன்காதல் மேல் கைபோட்டபடிக்கு
என்காதல்!!!

Monday, August 3, 2009

கனவுகள் புதைக்கப்படுகிறது

பின் மூளையின்
சுருக்கங்களில்...
மேடு பள்ளங்களில்...
அடிவாரத்தில்....

புதைந்தாகிப்போன
உன் நியாபகபடிமங்களை...

மெல்ல பெயர்த்தெடுத்து,
உயிர்பித்து...

கனவாக்கிக்கொள்ள
முயன்ற நிமிடத்தின்
கடைசி நொடியில்...

"சார் பேப்பர்........!!!!!"

ஒரு இயல்பான இரவு.


ன்றும் என்றும்போல் ஒரு இயல்பான இரவு.

ழை பட்டு தெரிக்கும் வெளிமுற்றத்தில்
உன் கொலுசு சத்தம் கேட்டவுடனே
விதி மீறி அலறியடித்துவிட்டது நான் விடிகாலைக்கு வைத்த அலாரம்!!
அலாரத்தை மன்னித்தாகிவிட்டது!!

உன் நெற்றி வழிந்து,மூக்கு நுனியில் முகாமிட்டிருக்கும்
முன்பே விழுந்துவிட்டிருக்கவேண்டிய ஒரு சொட்டு துளி...
புவியீர்ப்பு விசைக்கு முதுகுகாட்டும் தைரியம்!!
மன்னித்தாகிவிட்டது ழைதுளியையும்!!

சட்டென்று கேட்டுவிட்டாய் நீ...
"உன் இதையத்தில் நான் இருக்கிறேனா.... எங்கே காட்டு?"

உண்மை தானோ?
பெண்களின் காதல்கேள்விகள்... மனதில் முளைத்து,
மூளைக்கு முன்னேறும் முயற்சியில் பாதியில் தோற்று,
வெடுக்கென வாய்வழிவெளியேறிய வினாக்கள்தான்!!
விளங்கவில்லை எனக்கு??.

போகட்டும் போ...
இதோ நெஞ்சுகூடு கிழித்து,
கைவிட்டு துலவி தேடி எடுக்கிறேன்..
"அறிவியல் புத்தகங்களில் மட்டுமே கண்டு தெளிந்த.."
அந்த இதயத்தை.... அசட்டு நம்பிக்கைதான்!!

என் கைதட்டிவிட்டு சிரித்தபடியே ழையில் நகர்ந்துபோகிறாய்.
திடுக்கிட்டு எழுந்துபார்க்கிறேன்.
ரத்த சுவடும் இல்லை-உன்
சத்த சுவடும் இல்லை!!

இப்படித்தான்
ழையாகி
ரணமாகி-பின்
வீணாகிபோகிறது...
ஒவ்வொரு இயல்பான இரவும்!!.



வெட்கம் வரைகிறேன்....



சிவப்பு...
உனக்கு பிடிக்குமென வெளிர் மஞ்சள்...
கொஞ்சம் ஊதா....

ஆகிய
வண்ணக்குடுவைகளை
இடக்கையில் ஏந்தியபடிக்கு.....

நெளி கோடுகளாகவும்....
நீள் வட்டங்களாகவும்.....

சிறுவனின்
சிலேட்டுச்சித்திரங்களுக்கு சற்றும்
குறைவில்லா விதத்தில்....

வரைந்துகொண்டிருக்கிறேன்,
உன் உதட்டுச்சுருக்கங்களையும்....
திடுமென வெடித்துவிழும்
வெட்கங்களையும்......

Saturday, August 1, 2009

என் அப்பாவாகிய நீ...

பெரும்பாலான என் கவிதைகள்
இட்டு நிரப்பியபிறகுதான் தலைப்புகள் கண்டெடுக்கப்படும்.
உனக்கான கவிதையில் உன்பெயர்தான் பிள்ளையர் சுழி!!

உன் அடையாளங்களை அதிகம் சுமந்தவர் பட்டியலில்
'உந்தன் கந்தல் அரைக்கை சட்டையின் கடைசி பொத்தானைப்போல்...'
நான் நிச்சயமாய் ஒட்டிக்கொண்டிருப்பேன் அப்பா.....

பொங்கல்,தீபாவளிக்கு புதுச்சட்டை எனக்கு..
அழும்போதெல்லாம் அழகு பொம்மை..
கோடுபோட கற்குமுன்னே ஜியாமெட்ரி பாக்ஸ்!!
பந்து விளையாடி;மிதிவண்டி பழக்கி...
பின் பட்டம் வாங்கவைத்துவிட்டாய் என்னை!!!

அதிகம் படிக்கவில்லையாம் நீ..
முரட்டு சுபாவமாம் உனக்கு-அம்மா சொல்வதுண்டு!!
சிறு வையதில் தந்தை இழந்துவிட்டாயாம்..
குடும்ப சுமை முதுகிலாம்;பாசம் கட்ட நீ பழகவே இல்லையாம்!!
இருப்பின்
உன் துரத்துச்சொந்தமோ,நண்பனோ
நேற்றைய பொழுதில் பழகிட்ட நபரோ.....
எவரிடமாவது,"இவன் என் மகன்...." என்று சொல்லி
ர்வப்பட்டிருப்பாய் அப்பா-அந்த வினாடியை
என் பதினான்ங்கு வையதில் நீ கையில் கட்டிவிட்ட
டிகாரத்தின் முட்கள் கடந்துபோயிருந்தால்.....
நான் பாக்கியசாலி!!!

மளிகை பாக்கி-கொடுத்தாயிற்று....
ருப்பராயன் கோவில் காணிக்கை-அதுவும் தான்.
வீட்டுக்கடன்- இந்த வருடதிற்குள் கட்டியாகிவிடும்.
உனக்கான ஆசை ஒன்றேனும் தெருவி...
நிச்சயமாய் அப்பா..
கடன்காரனாய் காலம்தள்ளுவதில் சத்தியம் எனக்கு உடன்பாடில்லை!!!!!